மணப்பாறை பகுதியில் மண் அள்ளுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வட்டாட்சியர் சேக்கிழார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் இருந்தும் சட்டவிரோதமாக இரவு, பகலாக கிராவல் மண் அள்ளிச் செல்லப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மணப்பாறை வட்டாட்சியராக இருந்த சேக்கிழார் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அப்போது வட்டாட்சியர் சேக்கிழார், “கிராவல் மண் அள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்துள்ளார். அவர்கள் இரவும், பகலும் மணல் அள்ளினால் உங்களுக்கு என்ன? அப்படித்தான் ஓட்டுவார்கள். இது அமைச்சர், முதலமைச்சர் என மேலிடத்து உத்தரவு. நீங்க பேசாம உட்கார்ந்திருங்க” என இளைஞரிடம் தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து ஆட்சியர் சு.சிவராசு விசாரணை நடத்தி மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழாரை, பொன்மலை நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியாராக இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக மருங்காபுரியில் பணிபுரிந்த எஸ்.கீதாராணியை மணப்பாறை வட்டாட்சியராக நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.