தமிழகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக வாக்குச்சாவடி மையங்களில் இருக்கை வசதியுடன் காத்திருப்பு அறைகள்: வெயிலை சமாளிக்க தேர்தல் துறை நடவடிக்கை

கி.கணேஷ்

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முதல்முறையாக, வாக்குச்சாவடி மையங்களில், இருக்கைகளுடன் கூடிய வாக்காளர் காத்திருப்பு அறை வசதி செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே உள்ளன. இத்தேர்தலில், ‘100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு’ என்ற குறிக்கோளுடன் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தான் அதிகபட்சமாக 78.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2006-ல் 70.82 சதவீதமும், 2001-ல் 59.07 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இந்த பொதுத் தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை தமிழக தேர்தல் துறை எடுத்து வருகிறது.

முதல் கட்டமாக, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க் கவும், இறந்தவர் பெயர்கள், இரட்டை பதிவுகளை நீக்கவும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டன.

வாக்காளர்கள் பெயர்கள் சேர்ப்பு, திருத்தம் தொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2011 சட்டப்பேரவை, 2014 நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகள் மற்றும் அதில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை மத்திய பார்வையாளர்களும் பார்வையிட்டனர். இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதுதவிர, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றின் மூலமும், இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் துறை.

உச்சக்கட்ட வெப்பம்

வாக்குப்பதிவு நடக்கும் மே 16-ம் தேதி கத்திரி வெயிலின் உச்சக்கட்ட பதிவை கொண்ட நாள். வெப்பத்தால் வாக்காளர்கள் வாக்களிக்க வருவதை தவிர்த்து விடக்கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்துள்ளது. இது வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த உதவும் என கருதுகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி நிழல் தரும் வகையில் ‘ஷாமியானா’ அமைக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அல்லது குடிநீர் பாக்கெட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர்களின் வசதிக்காக, ஒவ் வொரு வாக்குச்சாவடி மையத்தி லும், கூடுதல் அறைகள் இருக்கும் பட்சத்தில், 2 அல்லது 3 அறைகள் இருக்கை வசதிகளுடன் வாக்காளர் காத்திருப்பு அறையாக திறந்து வைக்கப்படும். வாக்குச் சாவடியில் வரிசையில் உள்ள நபர் களின் எண்ணிக்கை குறித்து குறுஞ் செய்தி மூலம் வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT