ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்ட பாராஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ரவி. 
தமிழகம்

அரக்கோணம் அருகே ஊராட்சி தலைவரை சாதி ரீதியாக துன்புறுத்தல்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் தர்ணா

செய்திப்பிரிவு

பாராஞ்சி கிராம ஊராட்சியில் சாதி ரீதியாக அவமானப்படுத்தி வரும்துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி., அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தில் நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு குறவர் சமூகத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திமுகவில் இணைந்தார்.

ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு

இதற்கிடையில், ஊராட்சி மன்ற தலைவரை, துணைத் தலைவராக இருக்கும் விஜி என்பவர் சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக திட்டுவ தாக கூறப்படுகிறது. மேலும், ஊராட்சிமன்ற அலுவல கத்தை பூட்டி அவரை அனுமதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சோளிங்கர் காவல் நிலையம் மற்றும் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரவி புகார் அளித்ததால் தொடர்ந்து மிரட்டல் வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

துணைத் தலைவர் மீது புகார்

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராஞ்சி ஊராட்சிமன்ற தலைவர் ரவி புகார் மனு அளிக்க நேற்று வந்தார். அப்போது, துணைத்தலைவர் தன்னை சாதி ரீதியாக அவமானம் செய்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்த காவலர்கள் எழுப்பியதுடன் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT