வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தனியார் பேருந்து மீது விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் இருந்து வாலாஜா நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் பகுதி சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைய முயன்றது. அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் தனியார் பேருந்தின் மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி நின்றது.
அதேநேரம், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த சிலர் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விரைந்து சென்ற காவலர்கள் அந்த காரை சோதனையிட்டதில் 20 மூட்டை களில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பார்சல் இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் காரின் உரிமையாளர் குறித்தும் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.