வேலூர் பெரியார் பூங்காவில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா புகைப்பட கண்காட்சியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

இம்மாத இறுதியில் மணல் குவாரி தொடங்கப்படும்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

செய்திப்பிரிவு

இம்மாத இறுதியில் மணல் குவாரி திறக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் கோட்டை பெரியார் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க 7 நாள் கண்காட்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினார். பின்னர், கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வை யிட்டு பேசும்போது, ‘‘இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டபோது அவர்களை எதிர்த்து போராட யாருக்கும் தைரியம் இல்லை. வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலில் வேலூர் கோட்டையில் போராடினர்.

வடநாட்டு வரலாற்று ஆசிரியர் கள் வேலூர் புரட்சியை கண்டு கொள்வதில்லை. அதற்கு காரணம் அவர்கள் புகழ்ந்து விடக்கூடாது என்ற காரணம்தான். தமிழக அரசு தான் வேலூர் கோட்டையில் நடைபெற்ற போராட் டத்தை முதல் போராட்டம் என்பதை நாட்டுக்கு அறிவித்து ஏட்டிலேயே எழுதியிருக்கிறது.

எனவே, வேலூர் மகத்தான புகழ்பெற்ற ஊர். தியாகம் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சுதந்திர போராட்டத்தில் செக்கிழுத்து சித்திரவதைப்பட்ட தியாகிகள் எல்லாம் கண்காட்சியில் படமாக வைத்திருப்பது சிறப்பாக உள்ளது’’ என்றார். கண்காட்சியில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்திய குழுவினரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, ‘‘மேகே தாட்டுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எந்த காரணத்தை கொண்டும் எங்கள் இசைவு இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது. இது கர்நாடக அரசுக்கும் தெரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது.

ஒரு மாநிலமே அதை மதிக்க மாட்டேன் என்றால் இந்தியாவில் எப்படி ஒருமைப்பாடு ஏற்படும். அவ்வளவு சுலபமாக மத்திய அரசு சாய்ந்து விடாது. உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசும் செவிசாய்க்கவில்லை என்றால் அதன் பிறகு நாடும் இல்லை, அரசும் இல்லை. இம்மாத இறுதியில் மணல் குவாரிகள் திறக்கப்படும். விரைவில் எதிர் பாருங்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT