கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்தப்பட்ட சுமார்2 ஆயிரம் முன்களப் பணியாளர்கள் எனப்படும் மருத்துவப் பணியாளர்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர்.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ள காரணத்தை முன்வைத்து, அரசு வழிகாட்டுதல்படி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய பணியாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்மூலம் செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், புள்ளி விவரப்பதிவாளர்கள், இணை மருத்துவமனை பணியாளர்கள், தடுப்பூசி செலுத்தும் செவிலியர்கள், மக்களை நாடி மருத்துவத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பணியமர்த்தப்பட்டு 3 மாதங்களான நிலையில் இதுவரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுபற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் கேட்டபோது, “பல்வேறு இன்னல்களுக்கு இடையே பலத்த பரிந்துரைகளோடு, வேலைக்கு சேர்ந்தோம். ‘முன்களப் பணியாளர்கள்’ என்ற அடைமொழியோடு பணி வாங்கிய மருத்துவத் துறை அதிகாரிகள் இதுவரை எங்களது ஊதியம் குறித்து வாய் திறக்கவில்லை. நாங்களும் வேறு வழியின்றி வேலைக்கு வந்து செல்கிறோம். எங்கள் மாவட்டம் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றுவோருக்கும் இந்த ஊதியம் வழங்கப்படவில்லை” என்று பரிதாபத்துடன் கூறுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடியிடம் கேட்டபோது, “அவர்களுக்கான ஊதியம் எங்கள்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அவர்களுக்கு ஊதியம் விநியோகம் செய்யும்நிறுவனத்துக்கு பண பரிவர்த்தனை தொடர்பாக சில இடையூறுகள் நேர்ந்திருப்பதால், காலதாமதம் ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.