சிறுநீரகக் கோளாறு காரணமாக ஆர்.கார்த்திகேயன், சி.அருள், வி.ஜெயலட்சுமி உள்ளிட்ட 16 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 2014-ம் ஆண்டு சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்வதற்கு அறிவுறுத்தினர். அதன் பிறகு, நோயாளிகள் அனைவருக்கும் மஞ்சள்காமாலை சி கிருமித் தொற்று இருப்பதாகக் கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் தெரியவந்தது. இதையடுத்து, கவனக் குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி ஜெயராம் வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் அளிக்கப்பட்டுவிட்டது எனவும், கூடுதலாக ரூ.2 லட்சம் விரைவில் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று கூறியதை வாபஸ் பெறுவதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மாற்றிக்கொள்ள முடிவெடுத்த அரசு அதிகாரி, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு அளித்துள்ள வாக்குறுதியில் இருந்து பின்வாங்கவில்லை. கூடுதலாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பது நோய் தொற்றால் உயிரிழந்த 2 பேருக்கு மட்டும்தான். அனைவருக்கும் என தவறுதலாக தெரிவிக்கப்பட்டுவிட்டது” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பவர்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, அவர்களும் கூடுதலாக ரூ.2 லட்சத்தை பெற தகுதி உடையவர்கள்தான். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து உத்தரவிடுகிறோம். இந்த குழு, 6 மாதத்துக்குள் இழப்பீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்