தமிழகம்

தமிழகத்துக்கு மத்திய அரசின் வரி வருவாய் 24 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது: பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த ஆண்டு மத்திய அரசின் வரி வருவாய் தமிழகத்துக்கு 24 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது. அதேபோல, மத்திய நிதியுதவித் திட்டங்கள் மூலம் 6 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது என்று சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதங்களுக்கு நிதி, வேளாண் துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். பின்னர், உறுப்பினர்கள் பேசியதாவது:

வானதி சீனிவாசன் (பாஜக): தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வையை பின்பற்றித்தான், இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களும் வளர்ந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளரும் என்கிறார் பிரதமர் மோடி.

சுயசார்பு பாரதம்போல, சுயசார்பு தமிழகம் வளர வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தர வேண்டும் என்று கேட்கிறீர்கள். கடந்த ஆண்டு மத்திய அரசு வரி வருவாய் தமிழகத்துக்கு 24 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது. மத்திய நிதியுதவித் திட்டங்கள் மூலம் 6 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது.

சிந்தனைச் செல்வன் (விசிக): கடந்த முறை ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, ஆதிதிராவிடர் விடுதிகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தோம். தற்போது பெருந்தலைவர் எம்.சி.ராஜா நினைவில் இயங்கிக் கொண்டிருக்கிற விடுதி சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்று அறிவிப்புக்காக அரசுக்கு ஆயிரம் நன்றி தெரிவிக்கிறோம்.

பல்வேறு திட்டங்களை புத்தாக்கம் செய்வது என்பதைத் தாண்டி, திராவிட கருத்தியலையும் காலத்துக்கு ஏற்ற வகையில் புத்தாக்கம் செய்திடும் இந்த மகத்தான முயற்சியை வரவேற்கிறோம்.

ஐ.பி.செந்தில்குமார் (திமுக): கொடைக்கானல் மலைப் பகுதிபோல, தமிழகத்தில் உள்ளமலைப் பகுதிகளில் விவசாயத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நில ஒப்படைப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டாமாறுதலோ, நில விற்பனையோ செய்ய முடியாத நிலை இருக்கிறது. மலைப் பகுதி மக்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும்.

சட்டப்பேரவை காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை: ரூ.1,000 கோடி மதிப்பிலான அரசுக்கல்லூரி மேம்பாட்டு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் என்று பெயரிட ஆணை வழங்கியதற்காக முதல்வருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

சென்னை நந்தனத்தில் உள்ள எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் 75 ஆயிரம் சதுர அடி பரப்பில்ரூ.40 கோடியில் நவீன மாணவர்விடுதி கட்டும் அறிவிப்புக்காகவும் நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

சுயசார்பு பாரதம்போல,சுயசார்பு தமிழகம் வளர வேண்டும் என்பதை பாஜக வரவேற்கிறது.

SCROLL FOR NEXT