ஈரோடு: ஈரோடு சிவகிரி பொன்காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டு பொங்கல் விழா, கடந்த 15-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன.
கடந்த 20-ம் தேதி வேலாயுதசுவாமி கோயிலில் இருந்து பொன்காளியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில், கோயிலைச் சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் கைகளில் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தீப்பந்தம் ஏந்தி வழிபாடு செய்தனர்.