சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் 9 புலிகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றில் 13 வயதுடைய பெண் புலி உடல்நலக் குறைவால் கடந்த 23-ம் தேதி இரவு உயிரிழந்தது.
இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``இந்தப் புலி கடந்த சில வாரங்களாக அடாக்சியா என்ற கால் தசை பாதிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது. கடந்த இரு நாட்களாக உணவு எதுவும் உண்ணவில்லை. இதனால் உடல் அசைவின்றிக் கிடந்தது. இந்நிலையில் 23-ம் தேதி இரவு உயிரிழந்துள்ளது.
பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டும் அதன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர்கள் மூலம் புலியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.