கள்ளக்குறிச்சி தொகுதி வேட் பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் இல்லம் முன்பு தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அடுத்த தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி பரிமளம். இருவரும் நேற்று, முதல்வர் ஜெயலலிதா இல்லத்துக்கு செல்லும் போயஸ் தோட்ட சாலையில் ஆட்டோவில் வந்து இறங்கினர். திடீரென பரிமளம் தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து இருவர் மீதும் ஊற்றினார். அப்போது, அங்கி ருந்த போலீஸார் இருவரையும் தடுத்து, வாகனத்தில் ஏற்றி தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கோபு கூறும்போது, ‘‘நாங்கள், அம்மா உணவகம் என்ற பெயரில் நடத்திவந்த கடையை,தற்போது கள்ளக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.பிரபு, அவரது தந்தை ஐயப்பன் ஆகியோர் இடித்துத் தள்ளிவிட்டனர். நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பிரபுவை வேட்பாளர் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டும்’’ என்றார்.
இதேபோல, பெரம்பலூர் (தனி) தொகுதி வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வனை நீக்க வேண்டும் என பூலம்பாடி நகர செயலாளர் ஏ.வினோத் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் முதல்வர் இல்லத்தில் மனு அளித்தனர். வினோத் கூறும்போது, ‘‘தற்போதைய எம்எல்ஏவான தமிழ்ச்செல்வன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. மனு அளித்துள்ள நாங்கள் அனைவரும் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள். தமிழ்ச்செல்வனை தொகுதி மக்களே ஏற்காததால், அவரை மாற்ற வேண்டும்’’ என்றார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுவதால் அவரை மாற்ற வேண்டும் என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு, செங்கம் தொகுதி வேட்பாளர் தினகரன் ஆகியோர் மீது பல்வேறு புகார்கள் இருப்பதால் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் அந்தந்த பகுதி அதிமுகவினர் முதல்வர் இல்லத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுபோன்று பல தரப்பில் இருந்தும் வேட்பாளர்கள் மீது புகார்கள் குவிந்து வருவதால், இது தொடர்பாக விசாரிக்க தலைமை உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.