ஏப்ரல் 10-ம் தேதியன்று தேமுதிக - மக்கள் நல கூட்டணி வேட்டபாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "சென்னை அடுத்த மாமண்டூரில் வரும் 10ம் தேதி தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேமுதிக - மக்கள் நல கூட்டணி வேட்டபாளர்கள் முதல் பட்டியல் 5 கட்சிகளில் சார்பில் வெளியிடப்படும். வரும் தேர்தல் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பிரமிக்கத்தக்க வெற்றி பெறும்.
அதன் பின்னர் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை நீக்கப்படும். லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும். ஊழல்வாதிகளின் சொத்துகள் முடக்கப்படும். திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலில் தோல்வியைத் தழுவும்.
திமுக தனது கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதிமுகவோ மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறது. மக்கள் அதிகாரம் இயக்கம் மீதான இந்த நடவடிக்கையை மக்கள் நலக் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. நாங்கள் மதுவை ஒழிப்போம்" என்றார்.