திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரணி, திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சிலர் ஹெலிகாப்டர் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், மக்களின் உணர்வுகளை புரிந்த திமுக தலைவர் கருணாநிதி, தரை வழி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். 5 வருடங்களுக்கு முன்பு செய்வீர்களா? எனக் கோரி, வாக்குகளை பெற்ற இன்றைய முதல்வர் ஜெயலலிதா, எதற்கும் மக்களை சந்திக்கவில்லை. அவர் மட்டுமல்ல அமைச்சர்கள்கூட மக்களை சந்திக்கவில்லை. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி மக்களில் ஒருவராக உள்ளார்.
அதிமுக ஆட்சியால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் அதிகமான கொலை, கொள்ளைகள் நடந்துள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால், மாதத்தின் 30 நாட்களும் ரேஷனில் பொருட்கள் கிடைக்கும். விவ சாய கடன், கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மணல் கொள்ளை மற்றும் இயற்கை வளங்கள் தனியாரால் சுரண்டப்படுவதை தடுக்கும் வகையில் 2 லட்சம் இளைஞர்களை ஒருங் கிணைத்து, வணிக மையம் அமைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக மதுக்கடைகள் மூடப்படும். அதனை கருணாநிதி உறுதியாக செய்வார் என்றார்.