தேர்தல் சுவர் விளம்பரத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் முக்கிய பங்கு வகித்த 'ஸ்டென்சில்' அச்சுத் தொழில் தற்போது வரவேற்பின்றி அழியும் நிலையில் இருப்பதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
1980-90-களில் தேர்தலின்போது வீடுகளின் சுவர்களில், 'வாக்களிப்பீர்', 'நமது சின்னம்' என்கிற வாசகத்துடன் சின்னம் பொறித்த அச்சு பதிக்கப்படுவது வழக்கம். இந்த ஸ்டென்சில் அச்சு, அலுமினியம் மற்றும் தகரத்தில் உருவாக்கப்படுகிறது.
தகரத்தால் ஆன வாளி, மீட்டர் பாக்ஸ், மின் மோட்டார் கவர் போன்றவற்றைச் செய்யும் தொழிலாளர்கள், தேர்தலின்போது வேட்பாளர்களின் சின்னங்களை தகர அச்சில் ஸ்டென்சில் ஆக பொறித்துத் தருகின்றனர். அடுத்தவர் உதவியின்றி ஒரே நபர் இதனைக் கையில் பிடித்துக்கொண்டு சுவரில் சின்னத்தை பதிய வைக்க முடியும். இது, ரூ.250 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
இன்றைக்கும் பிரதான கட்சிகளின் சின்னங்களை ரெடிமேட் ஆக உருவாக்கி விற்பனைக்காக வைத்திருக்கின்றனர். சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் எந்த சின்னமாக இருந்தாலும் ஆர்டர் கொடுத்தால் ஓரிரு நாளில் செய்து தருகின்றனர். முந்தைய தேர்தல் காலங்களில் இரவு, பகலாக வேலை பார்த்த இவர்கள், ஸ்டென்சிலுக்கு அதிக வரவேற்பில்லை என்கின்றனர்.
கட்சியினர் காட்டும் ஆடம்பரம், கால மாற்றத்துக்கு ஏற்றவாறு நவீன உத்திகளில் விளம்பரம் செய்யும் விதம் ஆகியவற்றாலும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியாலும் இதற்கான வரவேற்பு குறைந்துவிட்டது என்கின்றனர் இதை தயாரிப்போர்.
இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள திருச்சியைச் சேர்ந்த காஜா கூறும்போது, ”கடந்த 30 வருடமாக இந்த தொழிலில் இருக்கிறேன். 15, 20 வருஷத்துக்கு முன்பெல்லாம் தேர்தல் அறிவித்தாலே எங்களுக்கு தீபாவளி மாதிரி கொண்டாட்டமாக இருக்கும். இதே பகுதியில் 50-க்கும் அதிகமானோர் ஸ்டென்சில் செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். அந்தளவுக்கு ஆர்டர் இருக்கும்.
ஆனால், 1991 தேர்தலுக்குப் பிறகு இதன் தேவை குறைந்துவிட்டது. சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர், டிவியில் விளம்பரம் என இப்போதெல்லாம் தேர்தல் விளம்பரம் நவீனமயமாகி விட்டது. என்னதான் இருந்தாலும் கிராமங்களில் இருந்து இன்றைக்கும் சில அடிமட்ட தொண்டர்கள் ஸ்டென்சில் வாங்கிச் செல்கின்றனர். அந்த நம்பிக்கையில்தான் மற்ற வேலைகளுக்கு நடுவே இதையும் செய்கிறோம்” என்றார்.