உதகை: நீலகிரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றும் வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உதகையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின்னர் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் 75-வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை தேசிய மற்றும் சா்வதேச அளவில் கொண்டாடும் வகையில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியை கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தவும், அரசின் அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகள், நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், சாதனைகள் குறித்த விவரங்களுடன் கண்காட்சிகள் நடத்தவும் தெரிவித்துள்ளார்.அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர திருநாள்அமுதப் பெருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சி மார்ச் 29 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஏடிசி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும், அறிந்த மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் இடம்பெறும்.
மேலும், வனத் துறை சார்பில், வன விலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பு, மரங்கள், வனத் துறைசார்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்தும், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மகளிர் திட்டம், சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் குறித்தும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம்,மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் ஆகிய திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இக்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன் மாரத்தான் ஓட்டம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சுதந்திர போராட்ட வரலாறுகுறித்து மாவட்ட அளவில் கட்டுரை,ஓவியப் போட்டிகள், கலை, பண்பாட்டுத் துறை சார்பில் இந்த விழா நடைபெறும் ஏழு நாள்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசாருதீன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.