சேலம்: பெற்றோர் ஜாமீன் எடுக்காத விரக்தியில் சேலம் மத்திய சிறையில் பல்லியை சாப்பிட்ட கைதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முகமது சதாம் (21). இவரை வழிப்பறி வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸார் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரை சிறையில் அவரது பெற்றோர் சந்திக்கவில்லை. மேலும், ஜாமீன் எடுக்கவும் முன்வரவில்லை. இதனால், வெறுப்படைந்த முகமது சதாம் நேற்று முன்தினம் மதியம் சிறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவரில் சென்ற பல்லியை பிடித்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்ததை தொடர்ந்து சிறை வார்டன் விசாரித்து அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.