சென்னை: போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 11 சாலை சந்திப்புகளில் நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேரடி அபராத முறையை படிப்படியாக குறைக்கவே இதுபோன்ற நடவடிக்கை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் விதிக்கும் போலீஸாரிடம் சில வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்கவும், விதிமீறல் வாகனங்களை தொழில்நுட்ப முறையில் துல்லியமாக கண்டறிந்து அபராதம் விதிக்கவும் சென்னை அண்ணா நகர் ரவுண்டனா, சாந்தி காலனி சந்திப்பு, 100 அடி சாலை, எஸ்டேட் சாலை சந்திப்பு, மேற்கு டிப்போ உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் 2019-ம் ஆண்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் படங்களை பிடித்து தொடர்புடைய வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை சென்னையில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, வேப்பேரி, அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, யானைகவுனி உட்பட மேலும் 11 சாலை சந்திப்புகளில் தற்போது 15 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கான கட்டுப்பாட்டு அறை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள், அந்த வாகன எண்களை நவீன கேமராக்கள் துல்லியமாக படம் பிடிக்கும். அதன் அடிப்படையில், கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இதற்கான செலுத்துச் சீட்டு வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 4 நாட்களில் இருசக்கர வாகனங்களை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இளஞ்சிறார்கள் பிடிபட்டனர். மேலும் 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 21 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்று அனைத்து சாலை சந்திப்புகளிலும் கேமராக்களை அமைத்து நேரடி அபராதம் விதிக்கும் முறையை படிப்படியாக குறைக்கவே இதுபோன்ற நடவடிக்கை என போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.