சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்ஸில் வந்த ஹோட்டல் ஊழியரிடமிருந்து ரூ.50 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் தனியார் டிராவல்ஸ் ஆம்னி பஸ்ஸில் ஒருவர் ரூ.50 லட்சம் கொண்டுவருவதாக தெரிவித்தார். இதையடுத்து பறக்கும்படை கட்டுப்பாட்டு அலுவலர் பி.வெங்கடேசன் தலைமையில் 3 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டன. மதுரை மாவட்ட எல்லையில் இருந்து குறிப்பிட்ட ஆம்னி பஸ்ஸை பறக்கும்படையினர் கண் காணித்தனர். மதுரை அருகே சிட்டம்பட்டி சோதனைச் சாவடியில் அவர்கள் பஸ்ஸை நிறுத்தினர்.
பஸ்ஸில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அரை மணி நேரத்துக்கும் மேல் சோதனை மேற்கொண்டனர். சூட்கேஸில் பணம் உள்ளது என வந்த தகவலால் சூட்கேஸ்கள் சோதனையிடப்பட்டன. இதில் பணம் ஏதும் சிக்கவில்லை என்றும், சோதனையை முடித்துக்கொண்டதாகவும் ஆட்சியருக்கு தகவல் அளித்தனர்.
பணம் உறுதியாக இருப்பதாக தகவல் வந்துள்ளதால், முழுமையாக சோதனை யிடுமாறு பறக்கும்படைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் சோதனையிட்டபோது ஒரு டிராவல் பேக்கில் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ரூ.1,000 கட்டுகள் 48, ரூ.500 கட்டுகள் 4 என மொத்தம் ரூ.50 லட்சம் சிக்கியது. பேக்கை கொண்டுவந்த மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த ஆர்.ராதா(62) என்பவரிடம் விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் ராதா கூறும்போது, ‘‘சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஹோட் டலில் பணியாற்றுகிறேன். மதுரையில் இதே நிறுவன ஹோட்டல் உள்ளது. அங்கு இந்த பேக்கை ஒப்படைக்கும்படி கொடுத்து அனுப்பினர். உள்ளே பணம் இருப்பது தெரியாது. இதற்கு மேல் நான் எதைச் சொன்னாலும் உரிமையாளரால் எனது வேலைக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்’’ என்றார்.
அதிகாரிகள் மேலும் கேள்வி கேட்ட போது, ராதா பதில் ஏதும் அளிக்காமல் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து முதலுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் செந்தில்குமாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பணத்தைக் கைப்பற்றி வருமானவரித் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
இதுபற்றி ஆட்சியர் கூம்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.54 கோடி ரொக்கம் மற்றும் ரூ.98 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்றார்.
பணம் கொண்டுவந்த ஊழியர் பணி யாற்றும் ஹோட்டல் சிவகங்கை மாவட்டத் தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்ச ரின் நெருங்கிய உறவினருக்குச் சொந்த மானது என்பது குறிப்பிடத்தக்கது.