தமிழகம்

கோடையில் ஏற்படும் தீ விபத்துகள், தடுக்கும் வழிகள்: தீயணைப்பு அதிகாரி ஆலோசனை

ஆர்.சிவா

கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்துகள், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தீயணைப்பு அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் தீ விபத்துகள் அதிகமாக ஏற்படும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும், பொருள் இழப்புகளையும் தடுப்பதற்கு நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால்போதும். இது குறித்து சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கு.ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகமான தீ விபத்துகளை ஏற்படுத்துவதில் முதலிடத்தில் மின்சார கோளாறும், 2-வது இடத்தில் சமையல் எரிவாயு கசிவும் உள்ளது. இந்த 2 காரணங்களால் மட்டும் 90 சதவீத தீ விபத்துகள் நடக்கின்றன.

மின் அழுத்தத்தால் தீ விபத்து

அறுந்துபோன மின்சார வயர்களை இணைத்து அதன்மேல் இன்சுலேசன் டேப் போட்டு பயன்படுத்துகின்றனர். அதிக வெப்பத்தால் இன்சுலேசன் டேப் இளகி, அந்த இடத்தில் தண்ணீரோ அல்லது வேறு பொருட்களோ படும்போது உடனடியாக தீப்பிடித்து விடுகிறது.

வீடுகளில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வயரிங்கை முழுவதுமாக மாற்ற வேண்டும். ஏசி, வாஷிங் மெஷின், தண் ணீர் மோட்டார் என வீடுகளில் மின் சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஆனால் பழைய வீடுகளில் இத்தனை மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வயரிங் இருக்காது. இதனால் அதிக மின் அழுத்தம் காரணமாக தீப்பிடிக்கிறது. கோடையில் அதிகமாக ஏசி பயன்படுத்தும்போது, குறைந்த மின் அழுத்தம் (லோ வோல்டேஜ்) காரணமாகவும் தீப்பிடிக்கிறது. வீட்டுக்கு தேவையான மின் அழுத்தத்தை தாங்கும் வகையில், ஐஎஸ்ஐ தரமுள்ள வயர்களை பயன்படுத்தினால் பல விபத்துகளை தடுக்க முடியும்.

காஸ் சிலிண்டர் கசிவு

வீடுகளில் இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிகுண்டைப் போன்றதாகும். சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டால் ஒரு விநாடிக்கு 75 அடி தூரம் பரவும் தன்மை கொண்டது. இந்த வாயு காற்றைவிட கனமானது என்பதால் தரையிலேயேதான் பரவும்.

சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க லைட்டரில் உள்ள சிறிய தீப்பொறி எப்படி போதுமோ, அதேபோல அறை முழுவதும் பரவியிருக்கும் எரிவாயு தீப்பிடிப்பதற்கும் மின்விளக்கு ஸ்விட்சை போடும்போது ஏற்படும் சிறிய ஸ்பார்க் போதுமானது. எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் தயவு செய்து மின் விளக்கை போடாதீர்கள். உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளியேறுவது சிறந்தது.

எரிவாயு ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள கடினமான டியூப்பை கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும். தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ரெகுலேட்டரை ‘ஆப்' செய்வது நல்லது. இந்த மூன்றையும் பின்பற்றினாலே 95 சதவீத சமையல் எரிவாயு விபத்துகளை தடுக்க முடியும்.

தேர்தல் நேரத்தில் பல இடங்களில் கொடிக் கம்பங்களை நடுவதற்காக தரையை தோண்டுவார்கள். அப்போது அடியில் இருக்கும் மின்சார வயர்களை பல நேரங்களில் சேதப்படுத்திவிடுவார்கள். பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் படும் போது பெரும் தீ விபத்து ஏற்படுகிறது.

உயரமான கட்டிடங்களில் பிடிக்கும் தீயை அணைப்பதற்காக 54 மீட்டர் ஏணி கொண்ட 3 ஹைட்ராலிக் பிளாட்பார்ம் வாகனங்கள் சென்னையில் உள்ளன. 47 மீட்டர் உயரம் ஏணி கொண்ட வாகனம் மதுரையிலும், 42 மீட்டர் உயரம் ஏணி கொண்ட வாகனம் திருச்சியிலும் உள்ளன. 101 மீட்டர் உயரம் ஏணி கொண்ட வாகனத்தை விரைவில் வாங்க இருக்கிறோம். இதை சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறுகிய சந்துகளில் உள்ள வீடுகளில் ஏற்படும் சிறிய தீயை உடனடியாக அணைப்பதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று அணைக்கும் வசதியும், பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் சிறிய ரக தீயணைப்பு டெம்போ வசதியும் நம்மிடம் உள்ளது.

தேசிய தீயணைப்பு நாள்

14-04-2016 ‘தேசிய தீயணைப்பு நாள்'. தீயை அணைக்கும்போது இறந்த வீரர் களுக்கு இன்று அஞ்சலியும் செலுத்தப் படும். ‘தீ விபத்தை தவிர்ப்போம், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வோம்' என்பதுதான் இந்த ஆண்டின் ஸ்லோகன். இன்று முதல் ஒரு வாரத்துக்கு தீயணைப்பு பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது என்றார். உதவி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபு கூறும்போது, “தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 75 படுக்கைகள் கொண்ட வார்டு உள்ளது. துறைத் தலைவர் டாக்டர் நிர்மலா பொன்னம்பலம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தீக்காயங் களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தினமும் சராசரியாக 15 முதல் 20 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மழை மற்றும் குளிர் காலங்களைவிட வெயில் காலத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது வெயில் காலம் என்பதால் தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT