சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து புதிய சட்டம் இயற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியறுத்திய நிலையில், ஏற்கெனவே அதிமுக அரசு இயற்றிய சட்டம் மூலமே உச்ச நீதிமன்றத்தில் தடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து, கடந்த 2020 நவம்பரில் அவசர சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்தது. அந்த சட்டத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியது. சட்டத்தை எதிர்த்து பெரிய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆக. 3-ம் தேதி ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்கு அதிமுக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்தது.
உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திமுக அரசை அதிமுக வற்புறுத்தியது. அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உடனடியாக புதிய சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை, எந்த புதிய சட்டமும் பிறப்பிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டால் பலர் பணம், வாழ்க்கையை இழந்து மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மக்களை காக்க தேவையான சட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்வதில் முதல்வருக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில், எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதற்கான குறிப்புகள் சரியாக இல்லாததால் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருந்தாலும், அந்த சட்டத்தை நிலை நிறுத்தவே நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். அந்த சட்டம் கொண்டுவந்ததற்கான காரணங்களை கூறி, அதில் உள்ள சரத்துக்கள் மூலமே நல்ல பதிலை பெறலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திமுக அரசு நடைமுறையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டே மக்களை காப்பாற்றும் பணியை செய்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும். நம்பிக்கையுடன் இருப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.