தமிழகம்

மதுரை | ரூ.15,000-க்கு சொந்த வீடு: விண்ணப்பிக்க குவியும் மக்கள்

செய்திப்பிரிவு

மதுரை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.15 ஆயிரத்தில் அடுக்குமாடி வீடு கிடைப்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரை கோட்டம் மூலம் மதுரை அருகே ராஜாக்கூரில் 1,566 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 269 சதுர அடி வீடுகள் ஏழைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

நீர்நிலைகளில் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களில் மறுகுடி அமர்த்தும் நிலையில் உள்ளோர், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ராஜாக்கூரில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. வீட்டின் விலை ரூ.3.05 லட்சம். அரசு ரூ.2.90 லட்சம் மானியம் வழங்குகிறது. ரூ.15 ஆயிரம் செலுத்தினால் பயனாளிக்கு வீடு ஒதுக்கப்படும்.

இந்த ஒதுக்கீட்டில் வீடுகளை பெற மதுரை ஆவின் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இது குறித்து வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறியதாவது: ராஜாக்கூரில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளை ஒதுக்க அறிவிப்பு வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. 2 நாட்களில் ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று கடைசி நாள். தகுதியுள்ள பயனாளிகளுக்கு காலியாக உள்ள வீடுகள் எண்ணிக்கையை பொருத்து உடனே ஒதுக்கப்படும்.

ராஜாக்கூரில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் அளவு 269 சதுர அடி. தற்போது இத்திட்டத்தில் 400 சதுர அடியில் பல வசதிகளுடன் கட்டப்படுகிறது. இந்த வீடுகளுக்கான ஒதுக்கீட்டை பெற அரசின் மானியம் போக பயனாளி ரூ.1.75 லட்சம் செலுத்த வேண்டும். பயனாளிகளுக்கு ஆண்டுவருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வேறு வீடுகள் இருக்கக் கூடாது என்றார்.

SCROLL FOR NEXT