தமிழகம்

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளர் வாய்ப்பு பறிபோனவர் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணி: அதிமுக தொண்டர்கள் நெகிழ்ச்சி

எஸ்.ஸ்ரீனிவாசகன்

அதிமுகவில் தனது வேட்பாளர் வாய்ப்பு பறிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் புதிய வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டவரின் கட்சி விசுவாசம் தொண்டர்களை நெகிழச் செய்தது.

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியன் நேற்று முன்தினம் மாலை மாற்றப்பட்டார். இவருக்குப் பதில் மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் மதுரை அதிமுகவினரிடம் பரபரப்பு காணப்பட்டது. ஏற்கெனவே மதுரையில் 2 இடங்களில் கட்சி முகவர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டது. வேட்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் தொடங்கிய இக் கூட்டங்களில் வேட்பாளர் வாய்ப்பை இழந்த எம்.எஸ்.பாண்டியன் பங்கேற் பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் முதல் நபராக கூட்டத்துக்கு வந்தார் பாண்டியன்.

புதிய வேட்பாளரான மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா சென்னையில் இருந்ததால் அவர் பங்கேற்க வில்லை. கூட்டத்தில் பேசிய எம்.எஸ்.பாண்டியன், ‘‘அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதி முகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார். தனது வேட்பாளர் வாய்ப்பு பறிபோனது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல், அதிமுக வெற்றி குறித்து மட்டுமே பாண்டியன் பேசியது அங்கிருந்த தொண்டர்களை நெகிழச் செய்தது.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இத்தொகுதியின் வேட்பாளராக பாண்டியனைத்தான் அதிமுக முதலில் அறிவித்தது. பின்னர் மாற்றப்பட்டு ஏ.கே.போஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT