ஈரோடு: ஈரோடு - பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, பக்தர்கள் இன்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அதிகாலை வேளையில் ஐஏஎஸ் அதிகாரியான அமுதா குண்டம் இறங்கியது கவனம் ஈர்த்தது.
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 7-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. கடந்த 15-ம் தேதி அம்மன் சப்பரம் கோயிலை அடைந்த நிலையில், அன்று இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்வு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று (22-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.
இதனையொட்டி, நேற்று மாலை கோயில் முன்பு குண்டம் அமைக்கும் பணி சிறப்பு பூஜைக்குப்பின்னர் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேளதாளத்துடன் பாதயாத்திரையாகவும், பூச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர். பக்தர்கள் குண்டம் இறங்கிய பின்னர், இன்று மாலை கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படும்.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக குண்டம் இறங்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த கோயிலில் குவிந்துள்ளனர். குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பக்தர்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
அதிகாலையில் பக்தர்கள் இன்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கியது கவனம் ஈர்த்தது.
திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்ணாரியில் வாகனங்களை நிறுத்தும் இடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பண்ணாரி - திம்பம் சாலையில் இன்று மாலை 3 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை (23-ம் தேதி) புஷ்பரத ஊர்வலமும், 24-ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும் நடக்கிறது. மார்ச் 25-ம் தேதி திருவிளக்கு பூஜையும், 28-ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.