சென்னை: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்குத் தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 22) ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார். அப்போது ஆணையத்தின் சார்பில், இடைத் தேர்தலையொட்டி அந்த படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறினார். இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் இதுதொடர்பாக நான் பேசவில்லை.
அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
முன்னதாக நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகியிருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் 'எனக்கு எதுவும் தெரியாது' என்று பதிலளித்திருந்தார்.