சென்னை: சட்டப்பேரவையில் உண்மை நிலையை எடுத்துரைத்ததற்காக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை வேளாண் அமைச்சர் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
தொகை வழங்காமல் தாமதம்
ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை வழங்காமல், மத்தியஅரசின் நிதி வரவில்லை என்றுசொல்லி, தாமதம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த உண்மையை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எடுத்துரைத்ததை பொறுக்க முடியாமல் வேளாண்துறை அமைச்சர் மிகவும் தரக்குறைவாக அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி பிரச்சினைக்கு நடுவர் மன்ற தீர்ப்புடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் பெற்றுத்தந்த கைராசிக்காரர் என்று காவிரி டெல்டா விவசாயிகளால் பாராட்டப்பட்டவர் பழனிசாமி. அவரைபோலி விவசாயி என்று குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உண்மை நிலையை எடுத்துச்சொல்வது ஜனநாயக கடமை. அதை அவர் தொடர்ந்து செய்வார். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அரசியல் நாகரிகத்தோடு விமர்சனங்களை முன்வைக்க வேண்டுமே தவிர, தரக் குறைவாக விமர்சிக்கக் கூடாது.
அவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாங்களும் அந்த நிலைக்கு செல்ல வேண்டியது வரும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.