சென்னை: பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால்தான் மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் தொகை திட்டத்தை உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றியுள்ளோம் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. அதன் விவரம்:
கே.ஏ. பாண்டியன் (அதிமுக): மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித் தொகை திட்டம் அதிமுக அரசின் திட்டம் என்பதாலேயே நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: பெண் கல்வியைஊக்குவிக்கவும், ஏழை பெண்களுக்கு உதவும் நோக்கிலும் கடந்த 1989-ல் முதல்வர் கருணாநிதியால் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதிமுக அரசு அத்திட்டத்தில் மாற்றங்கள் செய்து நடைமுறைப்படுத்தியது. அந்த திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. அவற்றில்24 சதவீதம் மட்டுமே தகுதியான விண்ணப்பங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் அத்திட்டத்தின் தலையாய நோக்கம். எனவே, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாகஇருக்கும். அதனாலேயே, இதுஉயர் கல்வி உறுதி திட்டமாகமாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து, கூடுதல் விளக்கம் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. 2009-ல் அது ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
முதலில், ஒருமுறை இந்த திருமண உதவித் திட்டத்தை நிறுத்திய அதிமுக அரசு, பின்னர் இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, 2011-ல் ஆட்சிக்கு வந்தபோது, தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி, தாலிக்குத் தங்கம் 4 கிராம் என்பதை 8 கிராம் என்றுஉயர்த்தி, 2016 முதல் நடைமுறைப்படுத்தி வந்தது.
அதிமுக ஆட்சியில் பெறப்பட்டு, நிலுவையில் உள்ள மனுக்களை தற்போது ஆய்வு செய்தபோது, அதில் 24.5 சதவீதம் பேர் மட்டுமே தகுதியான பயனாளிகள் என்று கண்டறியப்பட்டது. இதுதவிர, மாநிலக் கணக்காய்வு தலைவரின் அறிக்கையில், இத்திட்டம் குறித்துபல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு நிதியுதவி, தங்க நாணயம் வழங்குவதில் முறைகேடு செய்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் 43 வழக்குகள் பதிவு செய்து,43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயர் கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால், அதை சரிசெய்து, கல்வியே நிரந்தர சொத்து என்ற உயரிய நோக்கில்தான் ‘தாலிக்கு தங்கம் வழங்கக்கூடிய திட்டம்’ தற்போது ‘6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
திருமணத் தகுதி வருவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்கு கல்வித்தகுதியை, கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்ற பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம்தான் இந்த நிதியுதவி திட்டம். திருமண உதவி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பெண்கள் பயனடைந்தனர். ஆனால், இந்த ரூ.1,000 கல்விஉதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்.
சமூக நீதி, பெண் கல்வி, நிலைத்தநீண்ட பலன், நவீன சிந்தனை, தரகர்கள் இன்றி மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம்வரவு வைக்கப்படுவது ஆகிய அம்சங்களுடன், பெண்கள் அதிக அளவில் கல்வித் தகுதி பெற வித்திடக்கூடிய திட்டம். கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் இதை வரவேற்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
எதிர்பார்ப்பில் 3 லட்சம் பேர்
தொடர்ந்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘‘3 லட்சம் பயனாளிகள் உதவித் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனவே, திருமண உதவித் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். உயர்கல்வி உறுதி திட்டத்தை தனியாக செயல்படுத்த எங்கள் ஆதரவு உண்டு’’ என்றார்.