கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் ராகு சன்னதியில் ராகு பெயர்ச்சி விழாவை ஒட்டி நேற்று தங்கக்கவசம் அணிந்து அருள்பாலித்த ராகு பகவான். (அடுத்த படம்) மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கேது பகவான். 
தமிழகம்

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

கும்பகோணம்/மயிலாடுதுறை: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப் போற்றப்படும் நாகநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்களுள் ஒன்றான ராகு பகவான் நாகவல்லி,நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு பகவான் நேற்று மதியம் 3.13 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதைஒட்டி, இக்கோயிலில் நேற்றுகாலை உற்சவர் ராகு பகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில், சசிகலா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.

கீழப்பெரும்பள்ளம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள கேது பகவான் சன்னதியில் நேற்று கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. கேது பகவான் நேற்று மதியம் 3.13 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி, இக்கோயிலில் கேது பகவானுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT