சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் மருத்துவர் சுப்பையா. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண் ஒருவருக்குமிடையே கடந்த2 ஆண்டுகளுக்கு முன்பாக பார்க்கிங் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சுப்பையா, அந்த பெண்மணியின் வீட்டின் முன்பாக சிறுநீர் கழித்தது தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதாகக் கூடுதலாகச் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, மருத்துவர் சுப்பையாவை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சுப்பையாவுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக முறையீடு செய்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் அவருக்கு ஜாமீன் தரக்கூடாது எனக் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாதபோது திடீரென சட்டப்பிரிவுகளை கூடுதலாகச் சேர்க்க என்ன காரணம்என்றும், பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் ஒருவரைக் கைதுசெய்யும்போது வெள்ளிக்கிழமை இரவை தேர்வு செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். பின்னர் மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி, இது தொடர்பாக போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 24-க்கு தள்ளி வைத்துள்ளார்.