வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்த பின்னர் மீண்டும் பரவியதால், புகைமூட்டம் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் பீச்ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இங்கு அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 18-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. குப்பைகளில் பரவும் தீயை மேல் பகுதியில் தண்ணீர் ஊற்றி அணைத்தாலும், அடிப்பகுதியில் கனல் பரவுவது வழக்கமாக உள்ளது.
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள், 3 தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை அணைக்க போராடினர். இரு நாட்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில் தீ அணைக்கப்பட்டது. புகைமூட்டம் ஏதுமின்றி காணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் குப்பைக் கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைக்கும் பணியை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். கடும் வெயில் அடித்து வரும் நிலையில் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். ஜேசிபி மூலம் குப்பைகளை கிளறி முழுமையாக தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. குப்பைக்கிடங்கில் இருந்து வரும் பெரும் புகைமூட்டத்தால் பீச்ரோடு பகுதி மற்றும் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் பீச்ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மலைபோல் தேங்கி கிடக்கிறது.