தமிழகம்

பரிகாரம் காணும் நாளுக்கு தயாராவோம்: மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தமிழக சட்டம், ஒழுங்கு நிலைமைக்கு பரிகாரம் காணும் நாள் விரைவில் வரவுள்ளது. அதற்கு தயாராவோம் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை தி.நகர் பகுதி திமுக செயலாளர் ஏழுமலையின் மகன் கார்த்திக் என்ற சஞ்சீவ் குமார் - காயத்ரி திருமணம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் புதன்கிழமை நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

நான் துணை முதல்வராக இருந்து பணியாற்றியதைவிட சென்னை மேயராக இருந்து ஆற்றிய பணிகளை இன்றைக்கும் மக்கள் பாராட்டுகின்றனர். இது திமுகவுக்கு கிடைத்துள்ள பெருமை. இங்கு சுயமரியாதை சீர்திருத்த திருமணம் நடந்துள்ளது. இத்தகைய சீர்திருத்த திருமணத்தை கொண்டுவர பெரியார், அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதியும் பாடுபட்டு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து பலரும் பேசினர். திமுக என்றைக்கும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம். வெற்றி பெறுவதை வெறியுடன் கொண்டாடுவதும் கிடையாது. தோல்வியைக் கண்டு மூலையில் முடங்கி விடுவதும் கிடையாது.

ராமகோபாலன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் சட்டம் இருக்கு, ஆனா ஒழுங்காக இல்லை’ என்று கூறியுள்ளார். அந்த அளவுக்குதான் தமிழகம் உள்ளது. இதற்கு பரிகாரம் காணும் நாள் வெகுவிரைவில் வர உள்ளது. அதற்கு நாம் தயாராவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT