தமிழகம்

கன்னியாகுமரி தொகுதி பிரச்சாரத்தில் தளவாய்சுந்தரத்துக்கு போட்டி தரும் மீனாதேவ்

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக, அதிமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுகவில் யாருக்கு வாய்ப்பு என்பது தெரியாமல், அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் நீண்ட காலமாக தொடர்கிறது. இதனாலேயே பிரதான அரசியல் கட்சிகள் இந்த தொகுதியை முக்கியமானதாக நினைக்கின்றன. பாஜக சார்பில் நாகர்கோவில் நகராட்சித் தலைவர் மீனாதேவ், அதிமுகவில் மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில் கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்பி ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் பலம் பொருந்தியவராக வலம் வந்தார் தளவாய் சுந்தரம். அதன்பின் நீண்டகாலம் கட்சியில் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின், கிழக்கு மாவட்டச் செயலாளரானார். தீவிர கட்சிப் பணிகளால் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ஆனார். தற்போது, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக முகாம் தீவிரம்

தளவாய் சுந்தரத்தை எதிர்கொள்ளும் வகையில் வலுவான வேட்பாளரை களம் இறக்க திமுகவும் தீவிரமாக உள்ளது. முன்னாள் எம்பி ஆஸ்டின் அதிமுக, தேமுதிக கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வந்தவர்.

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் இந்த தொகுதியையே சாதகமாக கருதுகிறார். அவருக்கு நாகர்கோவில் மீதும் கண் உள்ளது. எனினும், வேட்பாளர் அறிவிப்பில் நீடிக்கும் தாமதம் தேர்தல் பணியை தாமதப்படுத்துகிறது.

பாஜக மும்முரம்

கன்னியாகுமரி தொகுதியில் முக்கிய ஆன்மிகத் தலங்கள் அதிகம். இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக பெறும் வாக்குகள் அதிமுகவை பாதிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இம்முறையும் தொகுதிக்குள் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டியிருந்தாலும், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளது பாஜக. தளவாய்க்கு போட்டியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஜக வேட்பாளர் மீனாதேவ். வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது திமுக முகாம்.

SCROLL FOR NEXT