தமிழகம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகிறார் ஓபிஎஸ்: இளவரசியும் விளக்கம் அளிக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என 154 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் கடந்த 2 ஆண்டுகளாக ஆணையத்தின் விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சேப்பாக்கம் கலச மகாலில் கடந்த 7-ம் தேதி மீண்டும் விசாரணையைத் தொடங்கியது.

கடந்த 7 ,8, 15-ம் தேதிகளில் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது, “2016-ம் ஆண்டுஜெயலலிதா பதவி ஏற்பதற்கு முன்னரே அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது. இன்னொருவரின் துணை இல்லாமல் ஜெயலலிதாவால் நடக்க முடியவில்லை. `எனக்கு தினமும் 16 மணி நேரம் பணி செய்ய வேண்டிஇருக்கிறது. எனவே, ஓய்வெடுக்கமுடியாது' என்று கூறி, அவர்மறுத்து விட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர்4-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது” என்று மருத்துவர்கள் ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 21) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டது முதல் 8 முறை சம்மன் அனுப்பியும், ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. தற்போது 9-வதுமுறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையம் விரைவில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது. எனவே, இன்று காலை 11.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக இருக்கிறார் என்று விசாரணை ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவரும் இன்று காலை 10 மணியளவில் ஆஜராக இருப்பதாக கூறப்படு கிறது.

SCROLL FOR NEXT