சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் தலைமை இயக்குநருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அகில இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் முதல்நிலை, முதன்மை தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு 2021-22-ல் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்ற 80 பேரில்12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் தமிழை விருப்பபாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள். தேர்ச்சி பெற்றவர்களில் 2 பேர் பெண்கள், ஒருவர் மாற்றுத்திறனாளி.
தேர்வர்களுக்கு உண்டு உறைவிடத்துடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி மையத்தில் இருந்து தேர்வு மையத்துக்கு சென்றுவர, சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டது. அனைத்து தேர்வர்களுக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3,000 வழங்கப்பட்டது.
தற்போது இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்கள், தலைசிறந்த வல்லுநர்களால் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களது ஆளுமைத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்.
அரசு மையத்தில் படித்தவர்கள் மட்டுமின்றி, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற தேர்வர்களும், இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்கலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
இதில் பங்குபெற விரும்புவோர், தங்களைப் பற்றிய விவரங்களை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல், 9444286657 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத்தேர்வுக்கான தேதி குறித்தவிவரங்கள். பயிற்சி மைய இணைய தளத்தில் (www.civilservicecoaching.com) விரைவில் வெளியிடப்படும்.
இந்த மையத்தில் பயின்று தேர்வான தேர்வர்கள் ஆளுமைத் தேர்வுக்கு டெல்லி செல்வதற்கான பயணச் செலவு தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டு வந்தது.கடந்த ஆண்டு முதல் இது ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.