கோத்தகிரி அரசுப் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து, திடீரென நகர்ந்து தாழ்வான பகுதியில் இருந்த தனியார் வணிக வளாக பாதுகாப்புச் சுற்றுச் சுவர் மீது மோதியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இதன் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் வங்கி, துரித உணவகம், பேக்கரி, தேநீர்கடை உட்பட பல கடைகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம்அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஷிப்ட் மாறுவதற்கும், பேருந்துகளுக்கு டீசல் நிரப்புவதற்கும் பணிமனைக்கு பேருந்துகள் வந்து, செல்லும்.
இந்நிலையில், டீசல் நிரப்புவதற்காக நேற்று அரசுப் பேருந்தை நிறுத்திவிட்டு, அலுவலகத்துக்கு ஓட்டுநர் சென்றார். அப்போது, பேருந்து திடீரென நகர்ந்து தாழ்வான பகுதியை நோக்கி செல்ல தொடங்கியது. பின்னர், அங்கிருந்த வணிக வளாக பாதுகாப்புச் சுவர்மீது பலமாக மோதியது. சுவர் இடிந்ததுடன், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர், பணிமனையில் இருந்து மற்ற பேருந்துகள் வெளியே செல்லாதவாறு தனது காரை சாலையின் குறுக்கே நிறுத்தியதுடன், காவல்துறை அதிகாரிகள் வரும் வரை காரை அங்கிருந்து அகற்ற மறுத்து, போக்குவரத்து கழகஅதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடிந்த பாதுகாப்பு சுவரை புதிதாக கட்டித் தருவதாக போக்குவரத்து கழகத்தினர் உறுதி அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். சமாதானமடைந்த அவர், அங்கிருந்து தனது காரை எடுத்துச் சென்றார்.