தமிழகம்

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க உதவுவோம்: இந்து முன்னணி

செய்திப்பிரிவு

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க இந்து முன்னணி உதவும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் நீண்ட காலமாக அரசியல்வாதிகளின் கைவசம் உள்ளன. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. கோயில் நிலங்களை மீட்க அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால், மாவட்டம்தோறும் இந்து முன்னணி சார்பில் சிறப்பு குழுக்களை அமைத்து ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் குறித்த தகவல்களை சேகரித்து தர தயாராக உள்ளோம்.

பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராடி வருகின்றன. அதற்கு முதலில் பெண்களுக்கு உடை அணிவதில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT