சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை-ஈரோடு இடையே முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06800) வரும் ஏப்ரல் 1-ம் தேதிமுதல் கோவையில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஈரோடு-கோவை இடையிலான முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06801), ஏப்ரல் 1-ம் தேதிமுதல் காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கரோனா தொற்று பரவலுக்கு முன்பு ரயில்களில் அனுமதிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (12682) நேற்றுமுன்தினம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கோவை-ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (16618) வரும் 22-ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகள் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.