நாமக்கல்லில் செயல்படும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் இணை மேலாளராக பணிபுரியும் கே. என்.சபரிஷ் என்பவர் நாமக்கல் கோட்டை சாலையில் நாள்தோறும் வாகனப் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரமான மாலை 4 மணிக்கு வரும் சபரிஷ் 4.30 மணி வரை இப்பணியில் ஈடுபட்ட பின்னர் தனது வழக்கமான பணிக்கு சென்றுவிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சென்னை மைலாப்பூர் ஹேமில்டன் எனது சொந்த ஊர். வங்கிப் பணியில் கடந்த 2006-ம் ஆண்டு இணைந்தேன். கடைநிலை ஊழியராக இருந்து பதவி உயர்வின் அடிப்படையில் இணை மேலாளராக உள்ளேன். சென்னையில் எங்கள் பகுதியில் நானும், சில நண்பர்களும் நிலா பவுண்டேசன் என்ற அமைப்பை ஏற்படுத்தி கணினி குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி அளித்து வருகிறோம். பணியிட மாறுதல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்னர் நாமக்கல் வந்தேன்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாமக்கல் - கோட்டை சாலையில் மாலை வேளையில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்து சென்ற ஒருவர் மீது வாகனம் மோதியது. அங்கு காவல் துறையினரும் பணியில் இல்லை. பள்ளி மாணவ, மாணவியரும் அந்த நெரிசலில் சாலையை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
எனவே, அப்பகுதியில் மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை வாகனப் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகிறேன். வங்கி மேலாளரிடம் அனுமதி பெற்று இப்பணியை செய்து வருகிறேன். அரை மணி நேரத்தை ஈடு செய்ய வங்கியில் கூடுதல் நேரம் இருந்து பணிபுரிந்து செல்வேன்.
கோட்டை சாலையில் போக்குவரத்தை சரி செய்யும்போது பள்ளி மாணவர்கள் எளிதில் சாலையை பாதுகாப்பாக கடந்து செல்வர். இதை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாணவர்களுடன் வரும் பெற்றோரும் நன்றி தெரிவித்துச் செல்வர். இது எனது பணி மேலும் சிறப்பாக செய்ய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.