சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறும்போது, “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், தமிழகம் பெரிதும் வளர்ச்சியடையும்.திமுக ஆட்சி நிர்வாகம் குறித்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சரியான பதிலைக் கூறமுடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க முடியாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் அது சாத்தியமில்லை.
தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தலில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதால், அதுகுறித்து பேச விரும்பவில்லை. தற்போது எனது 150-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். மண்டல அமைப்புச் செயலர் டி.மகாலிங்கம், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் உடனிருந்தனர்.