சென்னை: மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் 28, 29-ம் தேதிகளில் நடக்கவுள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி நேற்று கூறியதாவது: தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில், வரும் 28, 29-ம் தேதிகளில் அகில இந்திய அளவில் நடைபெறக்கூடிய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோ தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் கடுமையான நெருக்கடியை சந்தித்த தொழிலாளர்களாக ஆட்டோ தொழிலாளர்கள் மாறியுள்ளனர்.
தினமும் 100 கிலோ மீட்டர் ஆட்டோ ஓட்டினால் எரிபொருளுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.36,500 வரியாக செலுத்துகிற ஆட்டோ தொழிலாளர்களுக்கு கரோனா காலத்தில் நிவாரணம் வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. காப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டி விதிக்கும் மத்திய அரசு, டீசல், பெட்ரோல், காஸ்ஸை மட்டும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மறுக்கிறது.
மோட்டார் வாகன சட்டத் திருத்தம் என்ற பெயரால் கார்ப்பரேட்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களால் மோட்டார் தொழிலாளர்களிடமிருந்து, ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பறிக்கப்படுகிறது.
மோட்டார் வாகன சட்டத் திருத்தம், டீசல் பெட்ரோல் விலை ஏற்றம், ஆர்டிஓ அலுவலக கட்டண உயர்வு, ஆன்லைன் அபராதம் என்று வருமானத்தில் பெரும் பகுதியை வரியாக, அபராதமாக செலுத்தக் கூடிய அவல நிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும், டீசல் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையோடு நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளிகள் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.