புதுச்சேரியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மணமக்கள் திருமணத்தின்போது மணமேடையில் 'ஹிஜாப் எங்களது உரிமை' என்ற அட்டையை ஏந்தியிருந்தனர்.
கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் சில முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் கல்லூரி விதித்த தடைச் சட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. இத்தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்நிலையில் வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையில் புதுச்சேரியைச் சேர்ந்த நஸ்ருல்லாஹ் என்வருக்குக்கும், கடலூரைச் சேர்ந்த நஸ்ரின் என்பவருக் கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தின்போது மணமக்கள் மற்றும் மேடையில் இருந்தோர், 'ஹிஜாப் எங்களது உரிமை' என்ற பதாகைகளை கையில் ஏந்தி திருமணத்தில் பங் கேற்றனர். இதுபற்றி மணமக்கள் கூறுகையில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சமூகத்தின் தனிப்பட்ட உரிமை. இவ்விவகாரத்தில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருமணத்தின் போது'ஹிஜாப் எங்களது உரிமை' என்று வலியு றுத்தினோம்" என்று குறிப்பிட்டனர்.