பறவை கூண்டுகளுடன் நரிக்குறவர் இளைஞர்கள் மணிகண்டன், விஜயகுமார். 
தமிழகம்

பறவைகளை பாதுகாக்க விழிப்புணர்வு பாடம் எடுக்கும் நரிக்குறவர் இளைஞர்கள்

செய்திப்பிரிவு

பறவைகளை பாதுகாக்க கூண்டுகள் தயாரிப்பதுடன், மாணவர்கள், பொதுமக் களுக்கு பறவை குறித்த விழிப்புணர்வு பாடம் எடுத்து அசத்தி வருகின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த நரிக்குறவர் இளைஞர்கள்.

நரிக்குறவர் என்றாலே ஊசி மணிவிற்பதையும், பறவைகள், வனவிலங் குகளை வேட்டையாடி உண்பதையும் கேட்டும், பார்த்தும் இருப்போம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நிற்கின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த நரிக்குறவர் இன இளைஞர்கள் மணிகண்டன், விஜயகுமார். இவர்கள் அப்படி என்ன மாறுபட்டிருக்க போகிறார்கள் என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால் அவர்கள் மாறுபட்டிருப்பது தான் நிதர்சனமான உண்மை.

அவர்களின் இந்த மாற்றத்துக்கு காரணம் புதுச்சேரியைச் சேர்ந்த உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வேள்பாரி குழுவி னரின் முன்முயற்சிகள் தான். முன்பு பறவைகளை வேட்டையாடிய இவர்கள், இப்போது அவற்றை பாதுகாக்க கூண்டுகள் தயாரிக்கின்றனர். மேலும் பறவைகள், வனவிலங்குகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வன விலங்கு ஆர்வலர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இதுதொடர்பாக மணிகண்டன் நம்மிடம் கூறும்போது, ‘‘இப்போது வேட்டை யாடுவது மிகுந்த கடினமானதாக மாறிவிட்டது. வேட்டையாடி சிக்கினால் காவலர், வனத்துறையினருக்கு பதில் சொல்லவோ, அபராதம் கட்டவோ முடிவதில்லை. ஒரு இரவுக்கு வெளியே சென்றால் ரூ.500 தான் கிடைக்கும். அது வீட்டு செலவுக்கே சரியாகிவிடும். சேமித்து வைக்க முடியாது. ஆனால் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பினர் வந்த பிறகு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இப்போதெல்லாம் வேட்டையாட செல்வதில்லை. அவர்களின் வாழிகாட் டுதல், ஒத்துழைப்புடன் பறவைகளுக்கான கூண்டுகள் தயாரிக்கும் பணி செய்கிறோம். போதிய வருமானமும் கிடைக்கிறது. ஆகையால் இதுபோன்ற வேலை வாய்ப்புகளை தேடிச் செல்ல முடிவெடுத்துவிட்டோம்.

நான் ஏழாவது வரை படித்துள் ளேன். எங்களுக்கு பறவைகள், வனவிலங்குகளின் வாழ்க்கை முறை, அமைவுகள் நன்கு தெரியும். ஆகை யால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் ஆகியோருக்கு அவ்வப்போது வகுப்பு எடுக்கிறோம்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். இப்போது பறவைகள் குறித்து பாடம் சொல்கிறோம். போகப்போக விலங்குகள் குறித்தும் சொல்லுவோம். இந்த வேலை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எங்கள் இருவருக்கும் கிடைத்த வாய்ப்பு போல எங்கள் சமுகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் வேட்டையாடும் தொழிலையே விட்டுவிடுவார்கள்’’ என்றார்.

பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த விமல்ராஜ், ராம் ஆகியோர் கூறுகையில், ‘‘இப்போது தான் முதல் முயற்சியாக பறவைகள் கூண்டு தயாரிக் கின்றனர். இயல்பாகவே அவர்களுக்கு திறமைகள் இருக்கின்றன. அவர்களுக்கு நன்கு பரிட்சையமான தொழிலை சொல்லிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக செய்வார்கள். நம்முடைய அமைப்பு சார்பில் அவர்களை அணுகி பறவைகள், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என எடுத்துக்கூறி வழிகாட்டினோம். அதன்பிறகு எங்களோடு பயணிக்கின்ற னர். முதலில் பாரம்பரிய விதைகளை சேகரிக்க உதவினர்.

அதன்பிறகு சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் செய்து கொடுப்பது என அவர்கள் செய்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக கூண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான பண உதவி, பொருளுதவியை நாங்கள் செய்து கொடுத்தோம். இதுவரை 150-க்கும் மேற்பட்ட கூண்டுகளை தயாரித்துள்ளனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விலங்கின ஆர்வலர்களுக்கு பறவைகள், வனவிலங்குகள் குறித்து வகுப்புகள் எடுத்து வருகின்றனர். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

பிரெஞ்சு இன்ட்டியூட்டில் கூட இவர்கள் விலங்குகள் குறித்து பாடம் எடுத்துள்ளனர். இவர்களின் இத்தகைய திறமையை அங்கீகரித்து வனத்துறை, அவர்களை வனவிலங்கு ஆய்வு சார்ந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இவர்களின் வாழ்க்கை முறைகள் மாறி, மேம்பட வேண்டும் என்பதே எங்க ளுடைய விருப்பம்’’ என்றனர்.

பரிட்சையமான தொழிலை சொல்லிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக செய்வார்கள்.

SCROLL FOR NEXT