தேர்தல் பிரச்சாரத்தின்போது நன்னடத்தை விதியை மீறியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கலான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி அதிமுக செயலர் கே.ஜி.உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
‘மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மு.க.ஸ்டாலின் மார்ச் 14-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அன்று இரவு குழித்துறையில் உள்ள பொதுப் பணித்துறைக்கு சொந்தமான அரசினர் தங்கும் விடுதியில் தங்கினார். இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தேன். என் புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஏ.பி.பாலசுப்பிரமணியன் வாதிடும்போது, ‘இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வீரகதிரவன், தேர்தல் நடத்தை மீறல் புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். இதையடுத்து விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.