பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாரூக் மகன் அப்துல் வாஹிப் (28). பொறியியல் பட்டதாரியான இவர், துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை முகமது பாரூக் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியாகவும், அக்கட்சியின் மேடைப் பேச்சாளராகவும் உள்ளார்.
மார்ச் 8-ம் தேதி சொந்த ஊருக்கு வந்த வாஹிப்க்கு, மார்ச் 13-ம் தேதி தொழுதூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து, மார்ச் 18-ல் திருச்சி வழியாக துபாய் சென்றுவிட்டார். இந்நிலையில், அப்துல் வாஹிப் அண்மையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினரையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியிருக்கிறார்.
இதுகுறித்து திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம்(38) அளித்த புகாரின்பேரில், அப்துல் வாஹிப் மீது பெரம்பலூர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.