தமிழகம்

1.5 கோடி புது வாக்காளர்கள் ஆதரவு: வைகோவின் தேர்தல் கணக்கு

செய்திப்பிரிவு

ஊழலை விரும்பாத ஒன்றரை கோடி புதிய வாக்காளர்களை நம்பி மக்கள் நலக் கூட்டணி உள்ளது என்று வைகோ பேசினார்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.குணசேகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நேற்று பேசியதாவது:

திமுக - காங்கிரஸ் கூட்டணி நல்ல பாம்பும், தவளையும் போன்றது. எங்கள் கூட்டணி இரு மான்கள் இணைந்த கூட்டணி. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. கருணாநிதி குடும்பம் மீது 2-ஜி குற்றச்சாட்டு வழக்கு நிரூபிக்கப்படும். இருவரும் மதுவை ஒழிப்போம் என்கின்றனர். மதுவிலக்கு கொண்டுவருவதாக தமிழக மக்களை இருவரும் ஏமாற்றி வருகின்றனர்.

ஒன்றரை கோடி புதிய இளைஞர்கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்கள் ஊழல் கட்சிகளான திமுக, அதிமுக மீண்டும் வருவதை விரும்பாதவர்கள். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள் எங்களை ஆதரிப்பார்கள். இளைய தலைமுறை வாக்காளர்களை நம்பி உள்ளோம் என்றார்.

நாளை 2-ம் கட்ட பிரசாரம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது 2-ம்கட்ட பிரச்சாரத்தை கோவில்பட்டியில் 24-ம் தேதி தொடங்க உள்ளார். முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிற உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், மயிலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏப்ரல் 24-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், 24-ம் தேதிக்கு பதிலாக மே முதல் வாரத்தில் அங்கெல்லாம் வைகோ பிரச்சாரம் மேற்கொள்வார்.

மேலும், கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட திட்டங்குளத்தில் ஏப்ரல் 24-ம் தேதி வைகோ பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கோவில்பட்டியில் வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யும் வைகோ, அன்றைய தினம் மாலையில், சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் கோவை கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி மாலை வைகோ பிரச்சாரம் செய்கிறார். இதையடுத்து, அரவக் குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக் கடவு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை சென்னை தாயகத்தில் வரும் 28-ம் தேதி வெளியிடும் வைகோ, அன்றைய தினம் மாலை, ஆவடி, பூவிருந்தவல்லி, பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

SCROLL FOR NEXT