தமிழகம்

மேகேதாட்டு அணை விவகாரம் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசு: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மேகேதாட்டு விவகாரத்தில் திமுகஅரசு மவுனமாக இருந்து, தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறிஇருப்பதாவது: கர்நாடக முதல்வர்பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரூவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெறவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

புதிய அணையைக் கட்டினால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீருக்குத் தடை ஏற்படும்என்பதை திமுக அரசு இன்னும் உணரவில்லை. நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், அனைத்துக் கட்சிக்கூட்டம் குறித்தும் எவ்விதமானஎதிர்ப்பையும் தெரிவிக்காமல், மவுனமாக இருந்து தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைக்கிறது. இதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

ஒருவேளை எதிர்ப்புத் தெரிவித்தால், கர்நாடகாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரின் தொழில்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில், திமுக செயல்படுகிறதோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு முறைப்படி நடத்தி, கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி, முல்லை பெரியாறு,மேகேதாட்டு பிரச்சினைகளில் ஜெயலலிதா அரசு சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதேபோல, எந்தவிதமான சமரசமும் இல்லாமல், மூத்த சட்ட வல்லுநர்களை நியமித்து தமிழகத்தின் உரிமையை திமுக அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT