தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் திருமணநிதியுதவி திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ்உள்ளிட்டோர் வலியுறுத்திஉள்ளனர்.
தமிழகத்தில் திருமண வயதில் உள்ள பெண்களின் பெற்றோரது சுமையை குறைக்கும் வகையில் கடந்த 1989-ம் ஆண்டில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பாகவே ஈ.வெ.ரா. மணியம்மையார் விதவையர் மகள் திருமண நிதி (1981), டாக்டர் தர்மாம்பாள் விதவை மறுமண நிதி (1975), அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி (1985), டாக்டர் முத்துலட்சுமி கலப்பு திருமண நிதி (1967) ஆகிய திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தன.
ஆனாலும், இறுதியாக கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தில்தான் பயனாளிகள் அதிகம். இத்திட்டத்தின்கீழ், கடந்த 2011 வரை பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நிதி உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கத்தையும் அறிவித்தார். 2016-ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, தாலிக்கான தங்கத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தி அறிவித்தார். மொத்தமாக 5 திருமண நிதியுதவி திட்டங்களிலும் ஆண்டுக்கு ரூ.1.30 லட்சம் பெண்கள் பயனடைந்து வந்தனர். இதில் மூவலூர் ராமாமிர்தம் நிதியுதவி திட்டத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கடந்த 2020-21 ஆண்டு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், அதன்பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றி, உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தற்போதைய தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: பொருளாதார சூழ்நிலையால் ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண்களின் திருமணம் தடைபடுவதை தடுக்க, தொலைநோக்கு சிந்தனையுடன் திருமண உதவித் திட்டத்துடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால், வேண்டுமென்றே இத்திட்டத்தை கைவிட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசின் 5 வகை திருமண உதவி திட்டங்களில், 1 லட்சம் பேர் ராமாமிர்தம் திருமண நிதி திட்ட பயனாளிகள். இதில் இருந்தே அத்திட்டத்தின் பயன்களையும், அது தொடர வேண்டியதன் அவசியத்தையும் அறியலாம். ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது அரசுக்கு எந்த வகையிலும் அழகுசேர்க்காது. ஆண்டுக்கு ரூ.3,33,251 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் அரசுக்கு, திருமண நிதிஉதவி திட்டத்துக்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்குவது பெரிய விஷயம் அல்ல. எனவே, இத்திட்டத்தை தொடர வேண்டும்.
சமூகநலத் துறை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முதலில் தமிழகத்தில்தான் மறைந்த முதல்வர்ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை, ஜெயலலிதா கொண்டு வந்தார் என்பதாலேயே நிறுத்தியுள்ளனர். இது தவறான முடிவு. திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் பி.சுகந்தி: வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு திருமண நிதி என்பது பெரும் உதவியாக இருந்தது. மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக கூறி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்துவது சரியல்ல. கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, வறுமை, சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் திருமண நிதியுதவிதிட்டத்தை நிறுத்துவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.