விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக் குழு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. குழுத் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். குழு செயலர் மற்றும் ஆட்சியருமான ஜெ.மேகநாதரெட்டி, தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 37 திட்டங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சான்சத் ஆதர்ஷ் - கிராம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட முன்மாதிரி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எம்.பி.க்கள் கேட் டறிந்தனர்.
மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு 50 நாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஊரக வளர்ச்சி முக மைத் திட்ட இயக்குநர் திலகவதி கூறுகையில், இத்திட்டத்துக்காக ரூ.37 கோடி நிதி வர வேண்டி யுள்ளது. பிப். 22 வரை பணியாற்றிய அனைவருக்கும் ஊதியம் வழங் கப்பட்டு விட்டது. நிதி கிடைத்ததும், பாக்கி ஊதியமும் வழங்கப்பட்டு விடும் என்றார்.
மேலும், வேளாண் பணிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், மாவட்டத்தில் அவ்வாறு எத்தனை பேர் வேளாண் பணிகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர் என எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தரண்டராமன் கூறுகையில், மாவட்டத்தில் ஒருவர் கூட வேளாண் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை என் றார்.
அதைத் தொடர்ந்து, வேளாண் பணிகளுக்கு தேவையான நபர்கள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஊராட்சி அலுவலகங்களில் விளம்பர போர்டுகள் வைக்க வேண்டும் என எம்பிக்கள் அறிவுறுத்தினர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், நகராட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.