ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. செல்போன் கோபுர கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக கூறப்பட்டாலும், இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், நகர்மயமாதல், சிட்டுக்குருவிகள் வசிக்க ஏற்ற கூரை மற்றும் ஓட்டு வீடுகள் எண்ணிக்கை குறைவது போன்றவையும் அதன் எண்ணிக்கை குறைந்து வர காரணமாகிறது.
பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்காற்றுகின்றன. கொசு முட்டை, புழு, கொசுக்களை சிட்டுக்குருவிகள் உணவாக கொண்டுள்ளன. விதைகளை பரப்புவதிலும், உணவுச்சங்கிலியிலும் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்காற்றுகின்றன. தற்போது பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளே கட்டப்படுவதால் சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டவும், முட்டையிட்டு குஞ்சுப்பொறித்து இனப்பெருக்கம் செய்யவும், வசிக்கவும் ஏற்ற சூழல் இல்லாத நிலை ஏற்படுகிறது.
எனவே கான்கிரீட் வீடுகளில் வசித்தாலும், சிட்டுக்குருவிகள் வசிக்கும் வகையில் மண்பானைகளில் ஓட்டையிட்டும், அட்டைப்பெட்டிகள் வைத்தும் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கேற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளனர் கரூர் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜெ.ராஜசேகரன்- வனிதா தம்பதியர். கரூரில் உள்ள தனியார் பள்ளிகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து ராஜசேகர் கூறியது: நகர்ப்புறங்களில் தற்போது வீடுகள் அனைத்தும் கான்கிரீட்டுகளாக மாறிவிட்டதால் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுப்பொறிப்பது போன்றவற்றுக்கு வழியில்லை. இதனால், அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சிட்டுக்குருவிகள் மீதுள்ள ஆர்வத்தால் வீட்டு பால்கனியில் துளையிட்ட மண் பானைகள், அட்டைப் பெட்டிகளை வைத்து, அவற்றுக்கு உணவாக கம்பு, திணை, குடிக்க தண்ணீர் ஆகியவற்றை வைத்து வருகிறோம். இதனால், 100-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வீட்டுக்கு வரத்தொடங்கின. தற்போது எப்போதும் மண்பானைகளில் சிட்டுக்குருவிகளின் முட்டை இருக்கும். அவை குஞ்சு பொறித்து வளர்ந்ததும் பறந்து சென்றுவிடும். சிட்டுக்குருவிகளை காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு நான் வசிக்கும் பகுதி மக்களுக்கு வழங்கியுள்ளேன். சிட்டுக்குருவிகளின் கீச், கீச் ஒலியைக் கேட்பதால் மன அழுத்தம் குறைவதுடன், இயற்கையுடன் இணைந்து வாழும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்றார். எனவே சிட்டுக்குருவிகளின் அழிவை தடுத்து அவற்றை பாதுகாப்போம். இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்.