தமிழகம்

ராமஜெயம் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவில் 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 பேர் சேர்ப்பு

செய்திப்பிரிவு

ராமஜெயம் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவில் 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி - கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 10 ஆண்டுகளாகியும் திருச்சி மாநகர காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐயால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாததால், இவ்வழக்கை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் டிஎஸ்பி மதன், சிபிஐ டிஎஸ்பி ஆர்.ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) உருவாக்கப்பட்டது. இவர்கள் திருச்சியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதற்காக இன்ஸ்பெக்டர்கள் ஞான வேலன் (துவாக்குடி), சண்முகவேல் (சைபர் கிரைம்), பாலமுருகன் (அருப்புக்கோட்டை), வீரக்குமார் (சென்னை பெருநகரம்), டி.குமார் (ஓமலூர்) ஆகிய 5 இன்ஸ்பெக்டர்கள், முத்துப்பாண்டி (அலங்காநல்லூர்), முருகன் (மதுரை தெற்குவாசல்), செந்தில்குமார் (மணிகண்டம்), அண்ணாதுரை (விழுப்புரம்), லோகேஸ்வரன் (எஸ்.பி.சி.ஐ.டி) உள்ளிட்ட 12 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என மொத்தம் 40 பேரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் சேர்க்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, “சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தற்போது சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இதற்கு முன்பு மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்தவர்கள். திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு, நம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு, நவல்பட்டு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கு, என்ஐடி மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் திறம்பட பணிபுரிந்து, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இதேபோல ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களையும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதால் கள விசாரணை, தடயம் சேகரிப்பு, ரவுடிகளின் நெட்வொர்க் அறிந்தவர்கள், இணைய வழி ஆய்வு செய்தல், உளவு தகவல் சேகரித்தல் என காவல்துறையின் பல்துறை பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களை இக்குழுவில் நியமித்துள்ளனர். இவர்கள் மார்ச் 21 (நாளை) முதல் விசாரணையில் இணைந்து கொள்ள உள்ளனர்” என்றனர்.

SCROLL FOR NEXT