சொட்டநீர்ப்பாசன முறையில் செய்யப்பட்டுள்ள வாழை சாகுபடி | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: ரூ.960 கோடியில் சொட்டு நீர்ப்பாசனத் திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க இவ்வரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 960 கோடி ரூபாய் மத்திய, மாநில நிதியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து, தோட்டக்கலை-மலைப் பயிர்கள் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > தோட்டக்கலை என்கின்ற இன்னொரு இறகு மூலம் உழவர்கள் நலனை பாதுகாக்கும் பணியை இத்துறை ஆற்றுகிறது. நறுமணம் வீசும் மலர்களையும், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளையும், பல்சுவை மிகுந்த பழங்களையும் பதார்த்தங்களுக்கு வாசனை சேர்க்கும் பயிர்களையும், காலை மாலையில் பருகும் பானங்களையும் தோட்டக்கலைத் துறையே தந்து வேளாண் துறையின் மகுடத்தில் மாணிக்கப் பரலாய், மயிலிறகாய் இருக்கிறது.

> தமிழகத்தில், தொகுப்பு அணுகுமுறையில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கி, சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க இவ்வரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 960 கோடி ரூபாய் மத்திய, மாநில நிதியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

> தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் (Tamil Nadu Organic Farming Mission): தோட்டக்கலைத் துறை மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 50 எக்டர் அளவிலான தொகுப்புகள் (Cluster based) மாவட்டத்திற்கு இரண்டு என்ற விகிதத்தில் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும்.

> இத்தொகுப்பிலுள்ள விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வாயிலாக அங்கக சாகுபடி குறித்த புரிதலை ஏற்படுத்துதல், மண்வளம் குறித்து தகவல்கள் கொடுத்தல், உயிர் உரங்கள் குறித்த ஆலோசனையும் இடுபொருட்களையும் வழங்குதல், விளைபொருட்களில் உள்ள இரசாயனத் தன்மையினை ஆராய்வதற்கான ஆய்வகங்கள் ஏற்படுத்துதல், அங்கக சான்றளிப்புத் துறையில் பதிவு செய்தல், போன்ற பல செயல்பாடுகளுடன் இத்திட்டம், 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும். மேலும், இயற்கை எருவிற்கான மாட்டுக்கொட்டகை, மண்புழு உரக்கூடங்கள் போன்றவை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.

> ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டம்: ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் திட்டத்தில், குறைந்த வருமானத்தைத் தரக்கூடிய பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளிதப் பயிர்களை சாகுபடி செய்யவும், தானியப்பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து குறுகிய கால காய்கறிகள், பழங்கள் பயிரிடவும் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 20 ஆயிரம் ஏக்கரில் மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

> பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்: பழப்பயிர்கள் சாகுபடியை 22 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் இவ்வாண்டு "பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்" செயல்படுத்தப்படும். நடவுச்செடிகளையும் இதர இடுபொருட்களையும் வழங்கி இத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.

> தரமான மா, கொய்யா, சப்போட்டா, நாவல், பலா, இலந்தை, மாதுளை போன்ற நடவுச்செடிகளுக்கு முன் பதிவு செய்வது முதல் இடுபொருட்கள் விநியோகம், தரம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தல் வரை அனைத்து செயல்பாடுகளும் இணையவழியில் மேற்கொள்ளப்படும்.

> இத்திட்டம், 20 கோடியே 21 லட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

> உயர் விளைச்சல் பெற துல்லிய பண்ணையத் திட்டம் (Precision Farming): புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்படும். இம்முறையில், இடுபொருட்கள், பணி ஆட்களின் செலவினம் குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் ஏற்றுமதித் தரம் வாய்ந்த விளைபொருட்கள் கிடைக்கிறது. இத்திட்டம் எட்டாயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோடி ரூபாய் மாநில நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள், விதைகள் இடுபொருட்கள் வழங்கி, உயர் தொழில்நுட்பத்துடன் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.

> ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல்: ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, தென்னை, மா, கொய்யா, வாழை பயிரிட்டுள்ள சிறு/குறு விவசாயிகளுக்கு “ஊடுபயிர் தொகுப்பு” வழங்கப்படும். இத்திட்டம் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 27 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

> உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி (Hi-tech Horticulture): அதிக வருவாய் அளிக்கக்கூடிய பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள், நிலப்போர்வை அமைத்தல் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் மூலம் வண்ணக் குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி, கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட 25 கோடியே 15 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

> மேலும் நகர்ப்புற மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும் கீரைகளையும் வளர்த்துப் பயன்பெறும் வகையில் ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்துத் தோட்டத் தளைகள் (Vertical Garden) 500 பயனாளிகளுக்கு ரூபாய் 75 லட்சம் நிதியில் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT